திங்கள், 18 ஏப்ரல், 2011

யார் உனது சிறந்த நண்பன் ?



உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...


யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.


இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.


அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்.