ஜோதிடம்-ஜோதிடர் ,எது மெய்? எது பொய்?
முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய வால் பையனுக்கு நன்றிகள்.அவர் 2008 July மாதம் எழுதிய இந்த பதிவை நான் படித்ததும் அவர் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதிலாகவும் ,மற்றும் இது பற்றிய என்னுடைய கருத்துக்களையும் நான் சொல்லலாமா என்று கேட்டபோது உடனே "தாராளமாக" என்று அனுமதித்தார்.எனவே அவருக்கு என் நன்றி.
விஷயத்துக்குள் நுழையும் முன் என்னைப் பற்றியும் என் தந்தையைப் பற்றியும் சொல்கிறேன்.என் தந்தை ஒரு அரசாங்க வங்கியில் நல்ல பதவியில் இருந்தவர்.அவருடைய Hobby யில் ஒன்று ஜோதிடம்.அதை தொழிலாகச் செய்தவர் அல்ல.அவர் இப்போது எங்களிடையே இல்லை. என்னுடைய 21 வது வயதிற்கு மேல்தான் எனக்கு கடவுள் பற்றிய கேள்விகள் ,ஜோதிடம் மீதான கவனம் ஆகியவை ஏற்பட்டன.என் உறவினர்களில் பலர் இதை ஒரு உப தொழிலாக ஏற்று செய்து கொண்டிருக்கின்றனர்.இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த தலைப்பில் எழுத ,ஒருவரின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க,எனக்கு அதைப் பற்றிய ஞானம் சிறிதளவேனும் உண்டு என்பதை சொல்லத்தான்.
ஆரம்ப காலங்களில் இந்த கணித முறைக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை.காரணம் இதை முறையாகவும் குறிப்பாக பொறுமையுடனும் கற்றுக்கொண்டு அதன் பின் கடை விரிப்பவர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.ஆயிரம் வேரைக் கொன்றால்தான் (பேரை அல்ல) அரை வைத்தியன் என்பது போல இந்தத் துறையிலும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.பலரால் முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் இப்போது தெருவுக்கு இரண்டு பேரையாவது பார்க்க முடிகிறது.ஜோதிட சிம்மம் ,சாம்ராட் என்று பல பட்டங்களுடன் நடமாடும் ஜுவல்லரி போல தம்மை விளம்பரப் 'படுத்திக்' கொள்கின்றனர். ஒரே ஒரு ஜாதகத்தை (அதிலும் ஒரே ஒரு கட்டத்தை ) வைத்துக் கொண்டு , தாத்தா ,பாட்டி,அண்ணன் ,தம்பி,சித்தப்பாவோட கொழுந்தியாளுக்கு கூட பலன் சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களால் ஒரு அறிவியலாகப் பார்க்க வேண்டிய விஷயத்தை நாம் தவற விட்டு விடக்கூடாது என்பதுவும் இந்த பதிவின் ஒரு நோக்கம்.எனக்குத் தெரிந்தவை ...
ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?ஆதி காலத்தில் ஏழு கிரகங்களை வைத்துதான் பலன் சொல்லப் பட்டிருக்கிறது. வராகமிகிரர் என்பவர் எழுதிய நூலில் ராகு மற்றும் கேது என்ற கிரகங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் அதற்க்கு முன் இருந்த பராசரர் ,ஜெயமினி மற்றும் நாடி என்று குறிப்பிடப்படும் நூல்கள் ,சித்தர் எனக் கருதப்படும் புலிப்பாணி ஆகியோரது நூல்களிலேயே இவற்றை முக்கியமாக கருத்தில் கொண்டு பலன்கள் சொல்லபபட்டுள்ளது . இன்று எல்லாராலும் பரவலாக பயன் படுத்தப்படும் முறை பராசரி எனப்படும் பராசரரின் முறையே.கிட்டத்தட்ட 95% ஜோதிடர்கள் இவருடைய விதிகளை அடிப்படையாக வைத்துதான் பலன் சொல்கின்றனர்.ஆரம்பத்தில் இருந்தே இந்த ராகு, கேது மற்ற கோள்களைப் போல் அல்லாது எதிர் சுற்றில் சுழலும் நிழல் கிரகங்கள் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் சனியின் சுற்று வட்டப் பாதையோடு தொடர்புடையது என்றும் சொல்லப்பட்டுள்ளது,சமீபத்தில்தான் இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.தனிப்பட்ட முறையில் இதற்காக 1946 ஆம் வருட பஞ்சாங்கம் வரை பின்னோக்கி போனேன்.எதிர் திசையில்தான் குறிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன் உள்ளது கிரந்த எழுத்தில் உள்ளதையும் பார்த்தேன்.சரியாகத்தான் உள்ளது.வருடத்தைச் சொன்னால் கண்டிப்பாக உண்மையை வெளியிடத் தயாராக இருக்கிறேன்.பெண்ணிற்கு ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா?பெண்ணிற்கு ஏற்படுவதை போல ஆணுக்கு வெளிப்படையான நிகழ்வு அல்ல அது.மேலும் இதை எழுதியவர்கள் எல்லோரும் ஆண்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒருவேளை ஆண்கள் இடத்தில் பெண்கள் இருந்திருந்தால் இதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்களோ என்னவோ?உண்மையில் பெண்ணிற்கு எழுதப் படுவதையும் சரியானது என்று நம்ப முடியாது.இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.இரண்டு பெண்களை ஒருவர் திருமணம் செய்வது என்பதே தவறு.அதற்க்கு முதல் மனைவியாக இருக்கும் பெண்கள் ஒத்துக் கொள்வார்களா என்ன?புரட்சிகரமான பரிகாரம் என்று நான் அதைச் சொன்னாலும் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்.இதெல்லாம் தனி மனித விருப்பம் ,வற்புறுத்த முடியாது.இரு தார 'யோகம்' என்பது ஆணாதிக்க வார்த்தைதான்.மற்றபடி இதற்க்கு எளிமையான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது .சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?நாம் பூமியில் இருக்கிறோம் என்பதால் அதை சேர்க்கவில்லை.சந்திரன் துணை கிரகமே , அருகிலேயே இருப்பதாலும் பூமியில் அதன் தாக்கம் குறிப்பிடும் படி உள்ளதாலும் அது முக்கியத்துவம் பெறுகிறது .நாள்காட்டிகள் அனைத்துமே சந்திரனை அடிப்படையாக வைத்தே கணிக்கப் படுகிறது.சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பது அறிவியல் உண்மை.27 நட்சத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது ஏனென்றால் அவை பூமியின் சுற்று வட்டப் பாதையில் மிக அருகில் இருப்பதனால் .சனி ,ராகு ,கேது பாவ கிரகங்கள் என்பது பொதுவாக சொல்வதுதான்.ஆனால் அவைகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பல நூறு விதிகளில் சொல்லப் பட்டுள்ளது.ராஜ யோக அமைப்புகளிலும் இவை பங்கு பெரும். அவை யாருக்கும் எந்த பாவமும் செய்ததாக எந்த குறிப்பும் இல்லை.தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை?சந்தேகமே வேண்டாம் ,கண்டிப்பாக தாக்கம் இருக்கும்,இதைப் போன்ற 14 உப கிரகங்களையும் சேர்த்துதான் பார்க்கவேண்டும்,ஆனால் யாரும் செய்வதில்லை.பாதிப் பேருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது என்பது என் அபிப்பிராயம்.ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.உண்மைதான் ,அடுத்த நொடியில் இருந்து என்று யாராலும் சொல்ல முடியாது.காரணம் கிரகங்களின் சுழற்சியோ அல்லது தசைகள் ,புத்தி என கணக்கிடப்படும் காலங்கள் எல்லாமே மாதம் ,அல்லது வருட கணக்கில்தான் வரும்.இதை துல்லியமாக கணக்கிடுபவர்கள் குறைவு. காரணம் இதில் அவியல் மாதிரி பல விஷயங்கள் அடங்கும் ,ஜாதக அமைப்பு,கோள்களின் பெயர்ச்சி,அஷ்டவர்க்க கணிதம் . இனிமே உனக்கு நல்லதுதான் நடக்கும் என்றால் அதை நம்ப வேண்டாம்.எங்குமே இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் ஒருவருக்கு எந்த கெடுதலுமே நடக்காது என்று சொல்லப் படவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.பரிகாரங்கள் சொல்லப்படுவதும் கோவில்களுக்கு போகச் சொல்லுவதும் மன அமைதிக்காகத்தான் .எல்லா நாளும் நல்ல நாளே நீங்கள் மனது வைத்தால்.